பிரார்த்தனை.

                                          

எல்லாம் வல்ல இறைவனே! உனக்கு பணி செய்ய விரும்புவனுக்கு எதிலும் பற்று என்பது  கூடாது. உன்னோடு உணர்வுடன் உறவு கொள்ள உதவும் செயல்களில் கூட பற்று என்பது இருக்கக் கூடாது. சூழ்நிலைகளும், உலகியல் விவகாரங்களும் நம்மை சூழ்ந்து கொண்டு வழக்கத்துக்கு அதிகமாக ஆட்கொள்ளும்போது அவற்றிற்கு வசப்படாது இதயத்தில் ஆழ்ந்து உனது சாந்நித்யத்தை உணர்ந்து எதுவும் அசைக்க முடியாத சாந்தி நிரம்பிய அமைதியிலே எப்போதும் வாழ வேண்டும்.

 

எமது தலைவனே, ஓ! உம்மை மட்டுமே எங்கும் கண்டு எல்லா செயல்களையும் புரிய வேண்டும். செயல்களின் விளைவுகளில் கட்டுப்பட்டு, உலகம் எனும் சிறையில் அடைபட்டு, பறக்க முடியாமல் தவித்து இருக்கும் நிலையை நீக்கி மேலே உயரே உயரே பறந்து செல்ல அருள் புரிவாய்.

 

எம் இறைவனே! எனது அர்ப்பணம், எனது இருக்கை உனக்குச் செய்யும்  சமர்ப்பணம் யாவும் பூரணமானதாகவும், பயன் உடையதாகவும் இருக்க அருள் செய்வாயாக.

 

கருத்திற்கு அடங்காத மெய்ப்பொருளே,  வாக்கிற்கு எட்டாத சத் பொருளே, அனைத்தின் சாரமாய் இருப்பவனே, அன்பு ததும்பும் பக்தியோடு உன் முன்னால் தொழுது வணங்கி நிற்கிறேன்.

       ஸ்ரீஅன்னை. 25-26 பிப்ரவரி 1914. தியானமும் பிரார்த்தனையும்.

 

சிந்தனைப் பொறிகள்.

 

அன்னையின் பதில்கள்.

 

தெய்வ அன்னையே, பரமாத்மா இந்த உலகத்தைப் படைக்கும்படி உங்களிடம் சொன்னபோது அதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பது பற்றி உங்களுக்கு எப்படி தெரிந்தது?

 

இதனைச் செய்வதற்காக நான் எதையும் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கவில்லை. ஏனென்றால் பரமாத்மா தன்னுள்ளே எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டு இருப்பவர். இவ்வுலகம் முழுவதையும், இந்த உலகத்தைப் பற்றிய அறிவையும் அதை உருவாக்குவதற்கான ஆற்றலையும், அவர் தமக்குள் கொண்டவராக இருக்கிறார்.

 

உலகம் ஒன்று உருவாக்க வேண்டும் என்று அவர் தீர்மானம் செய்த உடனே அதைப் பற்றிய அனைத்தையும், ஞானத்தையும் அவற்றை உருவாக்குவதற்கான அறிவையும், சக்தியையும்-அதாவது என்னையும்-  அவர் வெளியே கொண்டு வந்தார். இதன் பிறகுதான் உலகத்தைப் படைக்கும்படி எனக்கு உத்தரவிட்டார்.

 

தெய்வ அன்னையே, நீங்கள் ஏன் மனிதர்களைப் போலவே இவ்வுலகிற்கு வந்து இருக்கிறீர்கள்? ஏன் உங்களது உண்மையான தெய்விக உருவில் வரவில்லை? அதாவது நீங்கள் எப்படி இருப்பீர்களோ அப்படி ஏன் வரவில்லை?

 

குழந்தாய், அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. நான் உங்களைப் போலவே வரவில்லை என்றால், உங்களால் என்னிடம் நெருங்கி வந்து இருக்கவே முடியாது. நானும், 'என்னைப் போல தெய்விக உருமாற்றம் பெறுங்கள்' என சொல்லி இருக்கவும் முடியாது.

 

அன்னையே! இதற்கு என்ன பதில் சொல்வீர்கள், நீங்கள் என்ன கடவுளா?

 

இந்தக் கேள்வியை நீ ஒவ்வொரு மனிதனிடமும் கேட்கலாம். அதற்கான பதில் இதுதான், ஆம். எல்லோருடைய இதயத்திலும், இந்த ஆற்றல் பொதிந்து, மறைந்து இருக்கிறது. இதனை நிரூபிப்பதுதான் மனிதனுடைய வேலை ஆகும்.

              

ஆசிரமத்தின் ஆன்மிக சூழல்.

கூர்மையான உள்ளுணர்வு இல்லாதவர்கள் இந்த இடத்தை அதாவது ஆசிரமத்தை- இது மற்ற இடங்களில் இருந்து வேறுபட்ட சூழல் கொண்டு இருக்கிறது என்பதை உணராமல் கடந்து சென்று விடுவார்கள். இங்கேயே வாழ்ந்து கொண்டு இருந்தாலும் கூட சிலர் இந்த வேறு பட்ட சூழலை உணராமல் இருக்கக் கூடும். போதுமான அளவு விழிப் புற்றவர்கள் யாராய் இருந்தாலும் இதனை நிச்சயமாக அறிந்து கொள்ள முடியும்.                                               

உயர்ந்த ஆன்மிக நிலை.

அற்புதங்களை நிகழ்த்த வேண்டும் என்று விரும்பும் மக்களின் எண்ண த்தை நான் நிறைவேற்றுவது இல்லை. ஒரு காலத்தில் என்னால்  அவ்வாறு செய்ய முடிந்தது, அற்புதங்களை நிகழ்த்தியும் இருக்கிறேன். அப்படி அற்புதங்கள் நிகழ்த்த வேண்டுமானால் பிராணமய உணர்விலேயே வசிக்க வேண்டும். இது அவ்வளவு சிறப்பான ஆன்மிக நிலை அல்ல.                       

உடலுக்கான மனதில் அதிமன சக்தி வெளிப்படும் போதுதான் அதன் சாந்நித்யம் இங்கே நிரந்தரமாக தங்க முடியும்.

ஓம் நமோ பகவதே.

ஓம் = நான் பரம்பொருளை வேண்டுகிறேன். நமோ = அவருக்கு வந்தனம். பகவதே = என்னை தெய்விகமாக்கு. இது எனது மந்திரம். இது நமது ஜீவனை அமைதியில் ஆழ்த்தும்.                           ஸ்ரீஅன்னை.