|
அன்னை தரும் ஆனந்த வாழ்வு.
ஆர்வத் தீ (Flame of Aspiration)
மலர்களில் பல வகைகள் உண்டு. ஒவ்வொரு மலரும் வெவ் வேறு விதமான தனிச்சிறப்பும், ஆன்மிக ஆற்றலும் கொண்ட வையாக இருக்கின்றன. நமது நாட்டில் இறைவனை வழிபடும் போது மலர்களைப் படைத்து பிரார்த்திக்கும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகின்றது.
ஆயினும் குறிப்பிட்ட மலருக்கு தனிப்பட்ட தெய்விகத் தன்மை உள்ளது; அதனைப் பயன்படுத்தி வாழ்க்கையில் உயர்வும், ஆன்மிகத்தில் மேலான நிலையையும் அடையலாம் என்பதை ஆதிபராசக்தியான ஸ்ரீஅன்னை தம் மெய்ஞான சக்தியால் உணர்ந்து விளக்கமாக கூறி உள்ளார்.
இவ்வாறு மலர்களின் தனித்தன்மைகளை அறிந்து கொள்வதன் மூலம் நாம் இறைவனுக்கு சிலகுறிப்பிட்ட மலர்களைப் படைத்து வழிபாடு செய்து தக்க பயனை விரைவில் பெறலாம். மலர்கள் எப்பொழுதும் துடிப்புடனும், அபரிமிதமான ஆன்மிக ஆற்றலுடனும் இருக்கின்றன. மேலும் தம்மை விரும்பி ஏற்று படைப்பவருக்காக வேகத்துடனும், ஆர்வத்துடனும் செயல் ஆற்றி நன்மை பயப்பவையாக இருக்கின்றது.
'மனிதன் செய்ய முடியாததை மலர்கள் செய்யும்' என்பது தற்கால உண்மை. இதனை உணர்ந்து மலர்களைப் பயன்படுத்தி வாழ்வில் ஏற்றமும், மகிழ்வும் அனைத்து வகையான முன்னேற்றத்தை யும் நம்மால் பெற முடியும். தற்காலத்தில் தமக்குரிய சரியான மலர்களைப் பயன்படுத்தி, இறைவனை வழிபாடு செய்து தம் வாழ்வில் உயர்வு, மேன்மை, இன்பும் பெற்றவர்கள் எண்ணிக்கை கணக்கில் அடங்காது.
மிகவும் எளிதான முறையில் நமது உயர்வுக்கும், வெற்றிக்கும் வழி காட்டும் பல்வகை மலர்களின் சிறப்புத் தன்மைகளைப் பற்றி ஸ்ரீஅன்னை தெளிவாகவும், விளக்கமாகவும் கூறியுள்ளார். மனித வாழ்வில் இன்பமும், வளமும், சாந்தியும் பொங்க மலர்களைப் பயன்படுத்தி மேன்மை பெறும் வழிமுறைகளை எடுத்துக் காட்டி உள்ளார்.
மனித உயிர்கள் நல்ல நிலையை அடைந்து இன்புற்று வாழ வேண்டும் என்ற அன்பின் காரணமாகவும், நம் மேல் தாம் கொண்டுள்ள பெரும் கருணையின் விளைவாக பராசக்தியின் வடிவமான ஸ்ரீஅன்னை இதுபற்றி விளக்கிக் கூறி நாம் முன்னேற்றம் அடைய வழி காட்டி வருகின்றார்.
மனிதன் வாழ்வில் முன்னேற முயற்சி செய்ய வேண்டியது அவசியம். அதனை தொடர்ந்து செய்து கொண்டு இருக்க வேண்டும். தொடர்ந்து முயற்சி செய்வதன் மூலம்தான் இறுதியில் வெற்றியைக் காண முடியும். இவ்வாறு முயன்று வெற்றி பெறுவதற்கு அடிப்படையாக இருப்பதுதான் ஆர்வம்.
ஆர்வம் என்பது இல்லாவிட்டால் மனிதனுக்கு எதிலும் பற்று இருக் காது. அவ்வாறு பற்று ஏற்படாவிட்டால் அவன் முயற்சி ஏதும் செய்து ஜெயிக்கவும் மாட்டான். நம் வாழ்வில் எதை அடைய வேண்டுமானா லும் அதனைப் பெற ஆர்வத்துடன் இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த ஆர்வம் நம்மைச் சரியான பாதையில் வழி நடத்திச் செல்லும். நமது வாழ்வின் போக்கையே மாற்றி உயர்த்தி விடும்.
உயர்ந்த நிலையை அடைய ஆசைப்படும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஆர்வத் தீயை தூண்டி வாழ்வில் விரும்பியதை அடையச் செய்திடும் தூண்டுகோலாக இருக்கும் ஆன்மிக சக்தி கொண்ட ஒன்றை ஸ்ரீஅன்னை அடையாளம் காட்டி உள்ளார். ஆர்வத் தீயை உருவமாகக் கொண்டு விளங்கும் அது ஒரு மலர் அல்ல, மரம் ஆகும். புதிய வருட துவக்கத்தில் நாம் நம்முள் இருக்கும் ஒரு நாளும் அழி யாத தன்மையுள்ள ஆர்வம் எனும் நெருப்பை தூண்டி எரியச் செய்ய வேண்டும். இந்த ஆர்வத் தீயானது தூண்டி விடப்பட்டு கொழுந்து விட்டு எரியும் போது நாம் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி முன்னேறிச் செல்வோம். இத்தகைய ஆர்வத் தீயை சூட்சுமமாகக் குறிக்கும் ஆன்மிகக் குறி யீடாக மேபில் எனுப்படும் மரத்தை ஸ்ரீஅன்னை குறிப்பிடுகின்றார். இங்கு காணப்படும் மரம் மேபில் என்பதாகும். இதனையே ஆர்வத் தீ என்ற ஆன்மிகப் பெயரிட்டு ஸ்ரீஅன்னை அழைக்கின்றார். ''இந்தச் சுடரானது (ஆர்வத் தீ) ஒளிவிட்டு எரியும் ஆனால் சுட்டுப் பொசுக்கி விடாது'' என இதற்கு விளக்கம் தருகின்றார்.
இம்மரத்தின் தாவரவியல் பெயர் ஏசர் (Acer) என்பது ஆகும். இதனை மேபில் (Maple) என அனைவரும் பொதுவாக அழைப்பார்கள். மேபில் மரமானது சீனா, ஜப்பான் மற்றும் வட அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளில் பரவலாக காணப்படுகிறது. இம் மரத்தின் இலையை கனடா நாட்டில் இயற்கை பாரம்பரியத்தின் சின்னமாக அறிவித்துள்ளனர். இம்மரத்தின் இலைகளானது உள்ளங்கையும் விரல்களும் சேர்ந்து இருப்பது போன்ற அமைப்பில் காணப்படும். இதன் மலர்களானது சிறிய அளவிலும் சிவப்பு, ஆரஞ்சு, மற்றும் பசுமையான நிறத்திலும் கிடைக்கின்றது. இம்மரத்தின் இலைகள் வசந்த காலத்தின் போது தனது இயல்பான மஞ்சள் நிறத்தில் இருந்து மாறி ஆழ்சிவப்பு நிறம் கொண்டதாக காணப்படும். ஆகவேதான் ஸ்ரீஅன்னை இதற்கு ஆர்வத் தீ என்ற ஆன்மிகப் பெயரிட்டு உள்ளார்கள். ஆர்வம் எனும் நெருப்பை எவ்வாறு தூண்டி விடுவது மற்றும் அதன் மூலம் எவ்வாறு பயன் பெறுவது என்பது பற்றி பகவானும், ஸ்ரீஅன்னையும் விவரித்து உள்ளார்கள். ''அமைதி நிரம்பிய நெஞ்சில் ஆர்வத் தீயானது உறுதியாகவும், நிலையாகவும் கொழுந்து விட்டு எரியும். உணர்வு மிக்க ஆர்வமானது எப்பொழுதும் நிலையாகவும், ஒளி மிகுந்ததாகவும் எரிந்து கொண்டு இருக்கும். இதனை வார்த்தைகளாலோ எண்ணங்களின் மூலமோ விவரிக்க முடியாது'' என பராசக்தியான ஸ்ரீஅன்னை குறிப்பிடுகின்றார். ''மனிதன் தன்னைப் பற்றி முழுமையாக அறிந்து இருக்கவில்லை. தனக்கு, தன்னறிவுக்கு எட்டியதையே சரியானது என ஏற்றுக் கொண்டு இருக்கிறான். அவனுக்குள் பலவிதமான சக்திகள் ஊடுருவி நம்மை கட்டுப்படுத்தி, செயல்படுத்தி வருவதை அவன் அறிந்து இருக்கவில்லை. மேற்பரப்பில் நிகழ்வதை மட்டுமே அவன் உணர்கிறான், அதனையே உண்மை என ஏற்றுக் கொள்கிறான். நமது சிந்தனை, சொல், செயல் மற்றும் பலவிதமான உணர்வுகள் முதலான அனைத்தும் எங்கிருந்து எப்படி உருவாகி வருகின்றன? என்பதை அவன் அறிந்து இருப்பது இல்லை. இவ்வாறு பலவிதமான சூட்சும சக்திகளுக்கு நாம் அடிமையாக இருந்து செயல்படுவதை உணர்ந்து கொள்ளாமல் இருக்கிறோம். இதனை நாம் மாற்றி அமைக்க முடியும். இதற்கு நாம் நமக்குள் இருக்கும் ஒளியை நோக்கித் திரும்ப வேண்டும். மேலே தெய்விக உணர்வில் இருக்கும் ஒளியை கீழே வருமாறு அழைக்க வேண்டும். நமது இதய மையத்தில் ஆழ்ந்து மறைந்து இருக்கும் சைத்திய புருஷனை வெளியே - மேலே - கொண்டு வர வேண்டும். சைத்திய புருஷன் மேலே வர வேண்டுமானால் ஆர்வம் எனும் தீயை நாம் தூண்டி விட்டு எரியச் செய்ய வேண்டும். அப்போது அதன் ஒளியால் விழிப்புணர்வு தோன்றி அனைத்தும் புலனாகும். இந்நிலையில் உங்களை நீங்கள் மட்டுமே ஆளமுடியும்'' என பகவான் ஸ்ரீஅரவிந்தர் விளக்குகின்றார். நமக்குள் ஊடுருவும் எண்ணங்களையும், சூட்சும சக்திகளையும் தடுத்து அமைதி பெற தியான முறையைக் கையாளலாம். ஆயினும் இவ்வாறு முயற்சி செய்து மனதை கட்டுப்படுத்த பல வருடங்கள் ஆகக் கூடும். ஆனாலும் நாம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்குமா? என்பது சந்தேகமே. இருப்பினும் உங்களது எல்லாவிதமான உணர்வுகளையும், அமைதியான முறையில் ஒன்றுபடுத்தி சாந்தியுடன் ஓரிடத்தில் நிலைபடுத்தி வெளி விவகாரங்களில் இருந்து தொடர்பை துண்டித்து விட்டு, எதிலும் கவனம் செலுத்தாமல் காத்து இருந்தால் திடீரென நாம் எதிர்பாராத வேளையில் ஆர்வம் எனும் தீயின் ஒளி வெளிப்படும். அது வெளிப்பட்டவுடன் வேண்டாதவைகளை எல்லாம் அது தூக்கி எறிந்து விடும். உன்னை உயரே, உயரே அழைத்துச் செல்லும். நீ யார் என்பது பற்றிய மெய் உணர்வை கொடுக்கும். இதன் மூலம் நீ மெய் உணர்வின், ஆர்வத்தின் அதன் உச்சிக்கே சென்று விடலாம். இதன் பிறகு நினைப்பதற்கு என்று எதுவுமே இருக்காது. உனக்கு எது தேவை, தேவை அற்றது எவை? என்பதும் என்ன நடக்கும் என்பதும் என அனைத்தும் புரிந்து விடும். இப்போது அதன் ஆனந்தப் பரவச நிலையை நீ நன்கு அனுபவிக்கலாம். இவை எல்லாம் மிகத் தீவிரமான, அதிகபட்சம் நிலைத்து நிற்கின்ற மன ஒருமைப்பாட் டின் விளைவாக திடீரென ஏற்படும் ஒரு நிகழ்வாகும். இது முயற்சி செய்கின்ற அனைவருக்கும் நிச்சயம் ஏற்படுகின்ற ஒரு அனுபவம் ஆகும். ஒவ்வொரு மனிதருக்கும் பலவிதமான வாய்ப்புகள் அமைகின்றன. முதலில் ஒருவன் அமைதியாக இருக்க முயல வேண் டும். இந்த உலகியல் விவகாரங்களை எல்லாம் விட்டுவிட்டு விலகி உள் நோக்கிச் செல்ல முயற்சிக்க வேண்டும். பின்னர் மேலே உள்ள உயர் சக்தியை நம்பி ஆர்வத்துடன் அழைக்க முற்பட வேண்டும். உன்னுடைய கேள்விகளுக்கு எல்லாம் விடை கிடைக்கும் வரை பொறுமையுடன் காத்து இருக்கவும் வேண்டும். இந் நிலையில் உனது கஷ்டங்கள், கவலைகள் எல்லாம் நொடிப் பொழுதில் காணாமல் மறைந்து விடும். நீ பேருணர்வுடன் இந்த ஆர்வத் தீயின் ஒளியில் வாழ வெற்றிகரமாக கற்றுக் கொண்டு விட்டால், உடனடியாக நற்பலனையும் முன்னேற்றத்தை யும் காண்பாய்'' என ஸ்ரீஅன்னை விளக்கம் தருகின்றார். மனிதர்கள் தாம் விரும்பிய அளவுக்கு உயர்வும் வளமும் பெற ஆர்வம் எனும் பண்பு பேருதவி செய்யும். அதனை முறையாக பயன்படுத்தி மேன்மை அடைவது மட்டுமே நமது கடமையாகும். எதுவும் முயன்றால் முடியும் என்பதால் ஆர்வத்தை நம்முள் வளர்த்து வாழ்வில் வெற்றி அடையப் பாடுபட்டால் இறை அருளால் அனைத்து நலங்களும் பெறுவோம். இது உறுதி. ஸ்ரீஅன்னை மற்றும் பகவான் ஸ்ரீஅரவிந்தர் அருளிய அறிவுரைகளும், வழிகாட்டுதல்களும், என்றும் தெய்விக ஆற்ற லுடன் மந்திரசக்தி நிறைந்தவையாக இருக்கின்றன. இறை அவதாரங்களின் அருளுரைகளை ஏற்று வழிபாடு செய்யும் போது நாம் வெகு எளிதாகவும், விரைவாகவும் விரும்பிய பலன்களைப் பெற்று விடலாம். இவ்வுலக வாழ்வையே பேரின்பப் பெருவாழ்வாக இறை அருள் மாற்றுவதுடன், நிலை யான தெய்விக ஆனந்தத்துடன் நாம் வாழ வழியும் பிறக்கும்.
|