பகைவருக்கும் அருளிய ஜயதேவர்.
 

ஒரு சமயம் ஆழ்ந்த பக்தரும், அறிவும், புலமையும் மிக்கவரான ஜயதேவர் கீத கோவிந்தத்தைப் பாடியபடி தீர்த்த யாத்திரை செய்து கொண்டு இருந்தார். அவருடைய மேன்மையைக் கேள்விப்பட்ட மன்னர் ஒருவர் ஜயதேவரை வரவேற்று மரியாதை செய்து பொன்னும், பொருளும் கொடுத்து உபசரித்தார்.

 

அப்பொருட்களின் மேல் எவ்விதமான நாட்டமும் இல்லாமல் ஜயதேவர் மன்னரை ஆசிர்வதித்து மேற்கொண்டு யாத்திரை யைத் தொடர்ந்தார். ஜயதேவரிடம் நிறைய விலை மதிப்பற்ற பொருட்கள் இருப்பதை அறிந்து கொண்ட திருடர்கள் அவருடன் யாத்திரை செய்வது போல நடித்து இணைந்து கொண்டனர்.

 

எதைப் பற்றியும் சிந்திக்காமல் ஜயதேவர் பரமாத்மாவின் சிந்தனையில் அவரது புகழைப் பாடியபடி முன்னேறிச் சென்று கொண்டு இருந்தார். வழியில் அடர்ந்த காடு குறுக்கிட்டது. அதனைக் கடந்து செல்ல முற்பட்ட வேளையில் திருடர்கள் தங்களது கைவரிசையைக் காட்டினர்.

 

பெரும் பக்தரான ஜயதேவரின் கை, கால்களைக் வெட்டிப் போட்டு ஓர் பாழுங் கிணற்றில் அவரைத் தள்ளி விட் டனர். பின் அவரிடம் இருந்த பொருட் களை எல்லாம் திருடிச் சென்று விட்டார்கள். சற்று நேரத்தில் சுயநினைவு வரப்பெற்ற ஜயதேவர் தமக்கு நேர்ந்த சோதனையை எண்ணி வருத்தப் படாமல் தனது பஜனையைத் தொடர்ந்தார்.

 

இவரது பக்திப் பாட்டின் சப்தம் அவ்வழியே சென்ற ஓர் மன்னரின் காதில் விழுந்தது. உடனே அவர் கிணற்றில் இருந்து அவரை மீட்டு வரும்படி காவலாட்களுக்கு உத்தரவிட்டார். ஜயதேவரின் நிலை கண்டு பதறி தன்னுடன் அரண்மனைக்கு அழைத்துச் சென்று தக்க மருத்துவ உதவிகள் செய்து காப்பாற்றினார்.

 

ஜயதேவர் பூரண குணம் பெற்றதும் தன்னுடைய அரசவை யிலேயே அரசவைக் கவிஞராக நியமித்து போற்றி வந்தார்.  இவ்வளவு நடந்த பிறகும் ஜயதேவர் தமக்கு இத்தகைய துன்பம் விளைவித்தது யார் என்பதை மன்னரிடம் சொல்லவே இல்லை.

 

சிறிது காலம் சென்றதும் மன்னர் ஏற்பாடு செய்த விழா வினை முன்னிட்டு அரண்மனையில் அனைவருக்கும் விருந்து அளித்தார். அந்த விருந்தில் பலதரப்பட்ட சாதுக்களும், சந்நி யாசிகளும் பெரும் திரளான மக்களும் கலந்து கொண்டனர். அவ்விருந்திற்கு ஜயதேவருக்கு தீங்கிழைத்த திருடர்களும் மாறு வேடம் இட்டு வந்தார்கள்.

 

அவர்களை பார்த்ததும் ஜயதேவர் அடையாளம் கண்டு கொண்டார். ஆனால் திருடர்களோ தற்போது அரசசபையில் செல்வாக்குடன் விளங்கும் ஜயதேவர் தங்களை காட்டிக் கொடுத்து விடுவாரோ, மன்னர் தண்டித்து விடுவாரோ என்ற பயம் உண்டாயிற்று.

 

ஆயினும் ஜயதேவர் எதையும் எண்ணாமல் மன்னரிடம் தமது பழைய நண்பர்கள் சிலர் விருந்திற்கு வந்திருப்பதாகவும், அவர்களை நன்கு உபசரித்து அனுப்புமாறும் வேண்டிக் கொண்டார். மன்னரும் அவரது வேண்டுகோளை ஏற்று அவர்களை அழைத்து நன்கு உபசரித்ததுடன் அவர்களுக்கு நிறைய பொன்னும் மணியும் வாரி வழங்கினான்.

 

பின்னர் பிரிவு உபசாரத்தின் போது அவர்களுடன் காவலாட்களை அனுப்பி அவர்களது இருப்பிடத்தில் விட்டுவிட்டு வரச் சொல்லி ஆணையிட்டார். அரண்மனையில் இருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என திருடர்கள் அனைவரும் வேகமாக வெளியேறி தங்கள் இருப்பிடம் நோக்கி விரைந்தனர்.

 

செல்லும் வழியில் திருடர்கள் காவலாட்களுடன் பேசிக் கொண்டு சென்றார்கள். அப்போது ஒருவன் உங்களுக்கு எப்படி ஜயதேவரைத் தெரியும்? என வினவினான். இதற்கு அற்ப புத்தி படைத்த திருடர்கள் சிரித்துக் கொண்டே தற்பெருமையுடன் பதிலுரைத்தனர்.

 

ஜயதேவரும், நாங்களும் எங்கள் நாட்டில் அரசுப்பணி புரிந்து கொண்டு இருந்தோம். அப்படிப்பட்ட நிலையில் இவர் பாவம் மிக்க தகாத காரியம் ஒன்றைச் செய்து விட்டார். இதனால் மன்னர் கடும் கோபம் கொண்டு இவரை கொன்று விடும்படி ஆணை பிறப்பித்தான்,

 

ஆனால் நாங்கள் அவரைக் கொல்ல மனமின்றி கை,கால்களை வெட்டி ஒரு கிணற்றில் போட்டு விட்டோம் என அபாண்டமாக பொய் கூறி ஜயதேவரை இகழ்ந்தான். இந்த உண்மை எல்லாம் எங்கே வெளியாகி விடுமோ என்ற பயத்தில்தான் ஜயதேவர் பயந்து போய் எங்களுக்கு இத்தகைய மேன்மையான உபசாரங்கள் செய்து அனுப்பி உள்ளார் எனக் கூறி கேலியாய் சிரித்தனர்.

 

இந்த அற்ப மனிதர்களின் அதர்மப் பேச்சைக் கேட்டதும் பூமித் தாய்க்கே பொருக்கவில்லை உடனே வாய் பிளந்து அந்த அற்பர்களை விழுங்கிக் கொண்டு விட்டாள். இவர்களை அனுப்ப வந்த காவலாட்களுக்கும், பொருட்களுக்கும் எவ்விதமான சேதமும் ஏற்படவில்லை.

 

எனவே எதிர்பராமல் நிகழ்ந்த சம்பவங்களை கண்டு அதிர்ச்சியால் உறைந்து போனார்கள் சுயநினைவு திரும்பப் பெற்றதும் பரிசுப் பொருட்களுடன் தங்கள் நாடு திரும்பி மன்னரிடம் எல்லாவற்றையும் ஒப்படைத்து நடந்தவற்றைக் கூறினர்.

 

இவ் விஷயம் ஜயதேவருக்குத் தெரிய வந்தது. தன்னால் அத்திருடர்களுக்கு நேர்ந்த துர்கதியை எண்ணி வருந்தினார். மன்னரிடம் விரைந்து வந்து இதுவரை நடந்தவைகளை முழுவதுமாகக் கூறினார். பின் என்னால்தானே அவர்களுக்கு இத்தகைய பெரும் தீங்கு நேரிட்டது.

 

வறுமையில் இருந்ததால்தான் அவர்கள் பாவச் செயல்கள் புரிந்தார்கள். ஆகவே அவர்களுக்குத் தேவையானதைக் கொடுத்து விட்டால் திருந்தி வாழ்வார்கள் என்று எண்ணியே தங்களிடம் அவர்களூக்கு பொருட்களை கொடுக்கச் சொன்னேன். ஆனால் அவை யாவும் தவறாகிப் போனதே,

 

என்னுடய தவறால் அவர்கள் அனைவரும் உயிரை இழந்து விட்டார்களே எனக் கண்ணீர் விட்டுக் கதறினார். துக்கம் தாளாமல் தவித்த ஜயதேவர் இறைவனிடம் அத்திருடர்களை மன்னித்து நற்கதி அளிக்கும்படி மனதார வேண்டிக் கொ ண்டார்.

 

அவரது நற்பண்புகளின் காராணமாக ஜயதேவர் வேண்டிய மறுகணமே வெட்டப்பட்ட ஜயதேவரின் கை, கால்கள் முழுமை யாகத் தோன்றின. அத் திருடர்களும் நற்கதி பெற்றார்கள். ஜயதேவரின் பக்தியையும், தவறைப் பொறுத்து மன்னிக்கும் மேன்மையான குணத்தையும், இறை நம்பிக்கையையும் அனை வரும் உணர்ந்து அவரைப் போற்றிப் பணிந்தார்கள்.

 

''பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே!'' என்ற பாடலுக்கு ஏற்ப சான்றோர்கள் என்றும் மேன்மையான முறையில் தான் சிந்திப்பார்கள், செயல்படுவார்கள் எனபது நிரூபணமாகிறது.